இமாசலபிரதேசத்தில் தொடரும் மழை:பலி 72 ஆக உயர்வு

சிம்லா, ஆக.18-
இமயமலை பிரதேசங்களான இமாசலபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையால் அதிகபட்ச மழைப்பொழிவை பெற்றுள்ளன. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு உள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இமாசலபிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை கொட்டி வருகிறது. இதுவரை 170 மேகவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், கடந்த 3 நாட்களில் மட்டும் இயல்பைவிட 157 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
தண்ணீர் தடங்கள் பாதிப்பு மாநில முதன்மை செயலாளர் (வருவாய்) ஆங்கர் சந்த் சர்மா கூறும்போது “இந்த பருவமழையால் புதன்கிழமை வரை ஏற்பட்ட சேதம் ரூ.7500 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது” என்றார். “கனமழையால் சிம்லாவின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. 650 சாலைகள் மூடப்பட்டு உள்ளதாகவும், 1,135 மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்) மற்றும் 285 தண்ணீர் வினியோக தடங்கள் பாதிப்பு அடைந்து உள்ளன” என்று மற்றொரு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மலைபோன்ற சவால் மாநில முதல் மந்திரி சுக்விந்தர்சிங் சுக்கு, செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மாநிலத்தில் கனமழையால் சேதமடைந்துள்ள கட்டமைப்புகளை சீரமைப்பு செய்ய ஓராண்டு காலம் பிடிக்கும். பருவமழை மற்றும் வெள்ளத்தால் சாலைகள், தண்ணீர் தட குழாய்கள் சேதம் அடைந்துள்ளன. சேதமதிப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன.