சிம்லா: ஆக 15-
இமாச்சலபிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இமாச்சலபிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச் சரிவால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.
சிம்லா சம்மர் ஹில்ஸ் பகுதியில் கன மழையால் சிவன் கோயில் இடிந்து விழுந்தது. இங்கு மீட்புப் பணிகளை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆய்வு செய்தார். இங்கு இடிபாடுகளில் இருந்து 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார்.
சிம்லாவின் ஃபாக்லி பகுதியில் பல வீடுகள் சேற்றில் புதைந்தன. சிம்லாவின் இந்த இரு இடங்களிலும் 15 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.சோலன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மேகவெடிப்பால் ஜடோன் கிராமத்தில் 2 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
இதில் 6 பேர் மீட்கப்பட்ட நிலையில் 7 பேர் உயிரிழந்தனர்.
பலேரா கிராமத்தில் நிலச்சரிவால் வீடு இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தன. பானல் கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.