இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு- 5 பேர் பலி

இமாச்சல பிரதேசம் ஆகஸ்ட். 10 – இமாச்சல பிரதேசத்தில கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு சிர்மாயுர் மாவட்டத்தில் உள்ள போயன்ட்டா பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை பெய்தது. இதனால் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
மலாகி கிராமத்தில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வசித்த ஐந்து பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் இன்று முதல் ஞாயிறு வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இதுவரை கனமழை தொடர்பான விபத்தில் 231 பேர் உயிரிழந்துள்ளனர். 6731 கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் 190 சாலைகள் மூடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நிலச்சரிவு, மண்சரிவு போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.