இம்ரான்கான் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

இஸ்லாமாபாத்: ஜனவரி 2-
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவரான இம்ரான்கான் (71) கடந்த 2018 முதல் ஏப்ரல் 2022 வரையில் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார். இவர் தனது பதவிக் காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை, அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் அவற்றை விற்று சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது.இதனிடையே, பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதனால் அவர்தொடர்ந்து சிறையில் உள்ளார். மேலும், இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.இந்நிலையில் வரும் பிப்ரவரி 8-ம்தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பிடிஐ கட்சி சார்பில் இம்ரான்கான் சிறையில் இருந்தபடியே போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து லாகூர், மியான்வாலி ஆகிய 2 தொகுதிகளில் இம்ரான்கான் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்நிலையில் இம்ரான்கானின் 2 வேட்பு மனுக்களையும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என்பதால் இம்ரானின் வேட்புமனுக்களை நிராகரித்ததாக தேர்தல்ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.