இம்ரான் கட்சி துணை தலைவர்5 ஆண்டுகள் போட்டியிட தடை

இஸ்லாமாபாத், பிப். 5- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியின் துணைத் தலைவர் மஹ்மூத் குரேஷி 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 5 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வரும் 8ம் தேதி பொதுத் தேர்தல் நடக்க உள்ளது.
இம்முறை பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ், பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (பிடிஐ) ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி பல்வேறு வழிகளிலும் வலுவிழக்கப்பட்டு வருகிறது. இக்கட்சி தலைவரான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கிரிக்கெட் பேட் சின்னம் இல்லாமல் பிடிஐ தேர்தலை சந்திக்கிறது.
இந்நிலையில், அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான் கானுடன் சேர்ந்து பிடிஐ கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஷா மஹ்மூத் குரேஷிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை சமீபத்தில் விதிக்கப்பட்டது.