இயந்திரங்கள் பழுதால் கைப்பற்றிய பணம் எண்ணி முடிக்கப்படவில்லை

புதுடெல்லி: டிச.11-
ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், இயந்திரங்கள் பழுது காரணமாக இன்னும் முழுமையாக எண்ணி முடிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசாவில் மதுபான தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பவுத் டிஸ்டிலெரி நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. மேலும், பால்டியோ சாகு குழுமத்தினர் வரி ஏய்ப்புசெய்வதாக கிடைத்த தகவலைஅடுத்து, அந்த குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும், ஜார்கண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. தீரஜ் சாஹுவுக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதில், நேற்று வரை 176 பணமூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில், 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன.
இந்த பணம் அனைத்தும் ஒடிசாவின் பொலாங்கிரில் உள்ளஎஸ்பிஐ வங்கி கிளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எண்ணப்பட்டு வருகின்றன.
தொடர்ச்சியாக பணத்தை எண்ணும் பணி நடைபெற்றதால் பல இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால், பணத்தை மொத்தமாக எண்ணி முடிக்கும் பணிகள் மூன்று நாட்கள் வரை தாமதம ஆகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை, ரூ.300 கோடி வரை எண்ணப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னும், 7 அறைகள் மற்றும் 9 லாக்கர்களில் உள்ள பணம் எண்ணப்படாமல் உள்ளதால் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.400 கோடியை தாண்டும் என்று வருமான வரி துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2018-ல் சென்னையில் நடந்த சோதனையின்போது ரூ.160 கோடி ரொக்க பணம் பிடிபட்டது. அதுவே இதுவரை வருமான வரித் துறை கைப்பற்றிய அதிகபட்ச ரொக்கமாக கருதப்பட்டது. தற்போது ஒடிசா, ஜார்கண்டில் காங்கிரஸ் எம்.பி.க்கு தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட பணம் அதை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.