இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாகர்கோவில்: நவ. 7: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
இம்மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் மழை பெய்து வருகிறது. அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. முக்கடல் அணை, மாம்பழத்துறையாறு அணை ஆகியவை முழு கொள்ளளவை எட்டியுள்ளன. சிற்றாறு அணைகள், பேச்சிப் பாறை அணை போன்றவை வெள்ள அபாய எச்சரிக்கை நிலையில் உள்ளன.
திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.மூவாற்று முகம், குழித் துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று மதியத்துக்கு பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பள்ளி, கல்லூரிகள் விடும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவ, மாணவியர் வீடு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டது. பேச்சிப் பாறை அணையில் நீர்மட்டம் 42.93 அடியாக உள்ளது.அணைக்கு விநாடிக்கு 484 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், 174 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 72.13 அடியாக உள்ளது. விநாடிக்கு 470 கன அடி தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து.

400 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து உள்ள நிலையில், 42.65 அடி கொள்ளளவு உடைய பொய்கை அணையில் மட்டும் நீர்மட்டம் 8.50 அடிக்கு மேல் உயரவில்லை.