இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்கப்பட்டது ‘போயிங் மேக்ஸ்’ விமானம்

புதுடில்லி, நவ. 24- சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘போயிங் 737 மேக்ஸ்’ விமானம், இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்கப்பட்டது. முதல் விமானத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சிந்தியா பயணம் மேற்கொண்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘போயிங்’ நிறுவனம் தயாரிக்கும் 737 மேக்ஸ் ரக விமானம், 2019ல் எத்தியோப்பியாவில் விபத்தில் சிக்கியது. அதில், நான்கு இந்தியர் உட்பட, 157 பேர் உயிரிழந்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்த வகை விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்பட்டது. அதையடுத்து, இந்த வகை விமானத்தை நம் நாட்டில் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.
தனியார் விமான நிறுவனமான, ‘ஸ்பைஸ்ஜெட்’, இந்த வகை, 205 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்திருந்தது. அதில், 13 விமானங்கள் வந்து சேர்ந்து, பயன்பாட்டில் இருந்தன. இந்த வகை விமானத்துக்கான தடையை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. அதையடுத்து, போயிங் 737 மேக்ஸ் விமானம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்படி டில்லியில் இருந்து குவாலியருக்கு நேற்று முதல் விமானம் இயக்கப்பட்டது. இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஸ்பைஸ்ஜெட் நிர்வாக இயக்குனர் அஜய் சிங், போயிங் இந்தியா தலைவர் சலைல் குப்தா உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர்.