காபூல்: ஆக.16-
ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடைபெறும் என்று அவர்கள் அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்தனர். ஆனால், அவர்கள் கூறியபடி தலிபான்களின் ஆட்சி நடைபெறவில்லை. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் அழகு நிலையம் நடத்தக்கூடாது, வெளியில் காரில் பயணம் செய்யும் போது ஆண் துணையுடன் தான் செல்ல வேண்டும், பெண் குழந்தைகள் 3-ம் வகுப்புக்கு மேல் படிக்க கூடாது என பல்வேறு விதிகளை விதித்து வருகின்றனர். தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக உலக நாடுகள் பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. ஆனாலும் அவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை.