இரண்டு அடுக்கு பஸ் சேவை: ஒப்பந்தப்புள்ளி கோர பிஎம்டிசி முடிவு

பெங்களூரு, பிப். 2: பிஎம்டிசி இரண்டடுக்கு (டபுள் டெக்கர்) பேருந்துகளை வாங்குவதற்கான ஏற்கனவே விடுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. ஒரே ஏலதாரர் பங்கேற்ற‌தால் ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்ட பிஎம்டிசி, புதிய ஒப்பந்தப்புள்ளியை கோர முடிவு செய்துள்ளது.
60 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் இரண்டடுக்கு பேருந்துகள் இயங்கத் தொடங்கின. 90 களுக்குப் பிறகு, இந்த பேருந்துகளின் இயக்கம் படிப்படியாக நிறுத்தப்பட்டது. தற்போதைய தலைமுறைக்கு மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் BMTC ஒரு திட்டத்தை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு 10 டபுள் டெக்கர் பேருந்துகளை வாங்க மாநில அரசு ஒப்புக்கொண்டது.
அதன் பிறகு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஆனால் அதில் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே கலந்து கொண்ட‌து. விதியின்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஒப்பந்த‌தாரர்கள் இருக்க வேண்டும்.
இந்த நிலையில் மறு ஒப்பந்தப்புள்ளி கோர பிஎம்டிசி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இரண்டு வாரங்களில் ஒப்பந்தப்புள்ளி பணிகள் தொட‌ங்கும். மறு ஒப்பந்தப்புள்ளியில் டாடா, அசோக் லேலண்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்ப்பதாக பிஎம்டிசி அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘தேசிய தூய்மை காற்று திட்டத்தின்’ (NCAP) கீழ் ஐந்து பேருந்துகளும், நகர்ப்புற நிலங்கள் இயக்குநரகத்துடன் (Duls) இணைந்து ஐந்து பேருந்துகள் இயக்கப்படும்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், நகரின் சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள வழித்தடங்களில் பயணிப்பதே இரண்டடுக்கு பேருந்து சேவையின் நோக்கம். பத்தாண்டுகளுக்கு முன்பு டீசல் அடிப்படையிலான இரண்டடுக்கு பேருந்துகள் இருந்தன. புதிய பேருந்துகள் மின்சாரத்தில் இயங்கும். நகரில் மாசுபாட்டை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.