இருக்கை இல்லாமல் நின்ற பயணி

மும்பை: மே 22 இண்டிகோ விமானத்தில் கூடுதல் முன்பதிவு காரணமாக பயணி ஒருவர் இருக்கை இல்லாமல் நிற்க நேரிட்டது. இதனால் அந்த விமானம் விமான நிலையம் திரும்பியது.
மும்பையில் இருந்து வாராணசி செல்லும் இண்டிகோ விமானம் நேற்று காலை 7.50 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச முனையத்தில் இருந்து புறப்பட்டது. அந்த விமானம் ஓடுபாதையில் செல்லும்போது, விமானத்தில் ஆண் பயணி ஒருவர் இருக்கை இல்லாமல் பின் பகுதியில் நின்று கொண்டிருப்பதை விமான ஊழியர்கள் கண்டனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனேவிமானிக்கு தகவல் அளித்தனர். விமானம் டேக்-ஆப் ஆவதற்கு முன் இத்தகவல் விமானிக்கு கிடைத்தது. உடனே அவர் விமானத்தை டேக்-ஆப் செய்யாமல் ஏரோபிரிட்ஜ் பகுதிக்கு விமானத்தை திரும்ப கொண்டுவந்தார்.
இதையடுத்து கூடுதல் பயணி இறக்கிவிடப்பட்டு, விமானத்தில் இருக்கும் அனைத்துப் பயணிகளின் உடைமைகள் கேபினில் உள்ளனவா என்று சரிபார்க்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் சுமார் 1 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
இதுகுறித்து அமித் மிஸ்ரா என்ற பயணி கூறும்போது, “காலை 7.50 மணிக்கு புறப்படும் இந்த விமானத்தை பிடிக்க ஒருவர் செக்-இன் பேக் இல்லாத பட்சத்தில் காலை 6.30 மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டியுள்ளது. விமான நிறுவனத்தின் சட்டவிரோத நோக்கங்களால் இத்தகைய தாமதம் ஏற்படுகிறது. இதனை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.
செல்லத்தக்க டிக்கெட் இருக்கும் பயணிகளுக்கு விமானத்தில் பயணம் மறுக்கப்பட்டால், விமான நிறுவனத்திற்கு டிஜிசிஏ அபராதம் விதிக்கிறது.