இருமுனை தாக்குதல்: இஸ்ரேல் எல்லைகளில் போர் உச்சகட்டம்

டெல் அவிவ்: அக்.9- இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் போரிடும் நிலையில், வடக்கு பகுதியில் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியுள்ளனர். இரு தரப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவம் கடும் பதிலடி கொடுத்து வருவதால், எல்லை பகுதிகளில் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
இஸ்ரேலின் தென் பகுதியில் காசா எல்லையில் இருந்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் ராக்கெட் குண்டுவீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர், காசா எல்லையின் தடுப்பு வேலிகளை குண்டு வைத்து தகர்த்து, 22 பகுதிகளின் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்.
எல்லை பகுதியில் இருந்து சுமார் 24 கி.மீ தூரம் ஊடுருவிய அவர்கள், இஸ்ரேலில் அப்பாவி மக்கள் மீதுசரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், இஸ்ரேல் தரப்பில் 74 பாதுகாப்பு படையினர் உட்பட 600 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் மக்களை பலரை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர்.
20,000 பேர் வெளியேற்றம்: பாலஸ்தீனத்தின் காசா நகரில் 426 இடங்களில் இஸ்ரேல் விமானப் படை நடத்திய பதில் தாக்குதலில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாகின. 313 பேர் உயிரிழந்தனர். 1,800 பேர் காயம் அடைந்தனர். இஸ்ரேலின் பதிலடி தாக்குதலால், காசா எல்லை பகுதிக்கு அருகே வசிக்கும் பாலஸ்தீனர்கள் 20,000 பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, தொலைதூர பகுதிகளுக்கு சென்று, ஐ.நா. பள்ளிக்கூடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
இஸ்ரேல் போர் பதற்றம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியபோது, ‘‘தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் கடமை, உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. தீவிரவாத தாக்குதலை நியாயப்படுத்த முடியாது.இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிசெய்ய, அமெரிக்காவின் ஆதரவு கட்டாயம் உண்டு. இஸ்ரேலின் தேவை குறித்துகேட்டறியுமாறு அமெரிக்க பாதுகாப்பு குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளேன். எகிப்து, துருக்கி, கத்தார், சவுதிஅரேபியா, ஜோர்டான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம்,ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க பாலஸ்தீன அதிகாரிகளுடனும் தொடர்பில் இருக்குமாறு எனது குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.
இஸ்ரேலுக்கு 8 பில்லியன் டாலர் மதிப்பில்ராணுவ உதவி அளிக்கவும் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். ‘‘இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இஸ்ரேலில் இந்திய மாணவர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியானது. இஸ்ரேலில் படிக்கும் கோகுல் மணவாளன் என்ற மாணவர் கூறும்போது, ‘‘பதற்றமான சூழலில் வாழ்கிறோம். இஸ்ரேல் போலீஸார் பாதுகாப்பு வழங்குவதால் இப்போதைக்கு பாதுகாப்பாக இருக்கிறோம். இந்திய தூதரகத்துடன்தொடர்பில் உள்ளோம்’’ என்றார்.
ஆதித்யா கருணாநிதி நிவேதிதா என்ற மாணவிகூறும்போது, ‘‘இதுபோன்ற இக்கட்டான சூழல் வரும் என்று நினைக்கவில்லை. 8 மணி நேரம் பாதாள அறையில் தங்கியிருந்தோம். இருக்கும் இடத்தைவிட்டு வெளியே செல்ல கூடாது என்று போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர். மிகுந்த அச்சத்துடன் வாழ்கிறோம்’’ என்றார்.இதுகுறித்து மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி கூறியபோது, ‘‘இஸ்ரேல் நிலவரத்தை பிரதமர் அலுவலகம் நேரடியாக கண்காணித்து வருகிறது. அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்’’ என்றார்.