இறுதி கட்டத்தில் மீட்பு பணி

டேராடூன், நவ.23-
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் கடந்த 12 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், தொழிலாளர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க, மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது.
மீட்பு பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்றும், தொழிலாளர்களை வெளியே கொண்டு வருவதற்கான கடைசிக் குழாய் உள்ளே விடப்பட்டுள்ளதாகவும் ஸ்லாலாவில் பணிபுரியும் எலக்ட்ரீசியன் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 12 நாட்களாக சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் வெளியே வருவதால், வெப்பநிலை வேறுபாடு மற்றும் தொழிலாளர்களின் இதர நிலைமைகளை கண்டறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 41க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அனைத்து வகையிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஓய்வுபெற்ற ஜெனரல் வி.கே.சிங், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் குழு சம்பவ இடத்தில் முகாமிட்டு தொழிலாளர்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். அனைத்து தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தனைகள் நடந்து வருகின்றன.
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. சுரங்கத்திற்குள் இன்னும் 12 மீட்டர் தூரத்திற்கு துளை போட்டால் தொழிலாளர்களை மீட்டு விடலாம் என மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் சார்தாம் மகாமார்க் பரியோஜனா தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், சில்க்யாரா பெண்ட் முதல் பர்கோட் பகுதி வரை 4.5 கிமீ தொலைவுக்கு மலையை குடைந்து சுரங்க சாலை அமைக்கும் பணி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டு நிறைவடைய உள்ள இந்த சுரங்கத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வந்தன. கடந்த 12ம் தேதி சுரங்கத்திற்குள் 41 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து, மண் சரிந்தது. இதனால், சில்க்யாரா பகுதி நுழைவாயில் இருந்து சுரங்கத்தில் 260 மீட்டர் தூரத்தில் 41 தொழிலாளர்களும் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில், மீட்பு பணியின் 11வது நாளான நேற்று, சில்க்யாரா நுழைவாயில் பகுதியில் நிறுத்தப்பட்ட துளையிடும் பணி மீண்டும் ஆகர் டிரில்லிங் இயந்திரம் கொண்டு தொடங்கப்பட்டது. இது வெற்றிகரமாக கைகொடுத்தது. 6 மீட்டருக்கு ஒரு இரும்பு பைப் பொருத்தப்பட்டது. ஒவ்வொரு கட்டமாக மேற்கொள்ளப்பட்ட துளையிடும் பணி நேற்றிரவு இறுதி கட்டத்தை எட்டியது. இரவு 7 மணி அளவில் 45 மீட்டர் தூரத்திற்கு துளையிட்டு அதில் இரும்பு குழாய் பொருத்தப்பட்டது. அவற்றை வெல்டிங் செய்யும் பணி துரிதகதியில் நடந்தது.தேசிய நெடுஞ்சாலை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் மஹ்மூத் அகமது கூறுகையில், ‘‘சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் பகுதியை அடைய 57 மீட்டர் துளையிட வேண்டும். தற்போது 45 மீட்டர் துளையிட்டு முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 12 மீட்டர் துளையிட்டால் போதும். எந்த தடையும் ஏற்படாமல் இருந்தால், புதன்கிழமை (நேற்று) இரவு அல்லது வியாழன் (இன்று) காலை தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள்’’ என்றார்.மீட்பு பணி இறுதி கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி டேராடூனில் இருந்து உத்தர்காசிக்கு நேற்றிரவு விரைந்தார். மேலும், சுரங்க பகுதியில் 40 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. தொழிலாளர் மீட்கப்பட்ட உடனேயே அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 8 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்றும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 41 தொழிலாளர்களும் விரைவில் மீட்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து சில்க்யாரா பகுதியில் கடந்த 11 நாட்களாக காத்திருக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மூன்றாவது நாளாக பிரதமர் விசாரிப்பு
சுரங்க மீட்பு பணிகள் குறித்து தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் பிரதமர் மோடி, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். தொழிலாளர்களுக்கு உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் புதிய குழாய் மூலம் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார்.