இறுதி சடங்கில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு 5 பேர் சாவு

இம்பால், அக். 13- மணிப்பூரில் குகி என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த பயங்கரவாத குழுவை அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், மணிப்பூரின் ஹிங்கொஜங் மாவட்டத்தில் கடந்த 10-ம் தேதி பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் குகு பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி அம்மாநிலத்தின் கங்க்பொக்பி மாவட்டம் கங்மம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கிராம மக்கள் பங்கேற்றனர். அப்போது, அங்கு வந்த குகி பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் கங்மம் கிராமத்தினர் 5 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.