
புதுடெல்லி, பிப். 25-இலங்கையில் அதானி குழுமத்தின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு அந்த நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த திட்டங்களுக்கான ஒட்டுமொத்த முதலீடு 44.2 கோடி டாலராகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.3,650 கோடி ஆகும். பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தின்படி மன்னாரில் காற்றாலை மின் நிலையம் 250 மெகாவாட் திறனிலும், பூனேரின் கிராம மின்நிலையம் 100 மெகாவாட் திறனிலும் அதானி குழுமம் அமைக்கவுள்ளது.இந்த திட்டங்களுக்கான ஒப்புதல் கடிதத்தை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திடம் இலங்கை முதலீட்டு வாரியம் வழங்கியுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அதானி குழுமம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை வெளியானதையடுத்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியது.இதுவரையில் ரூ.11 லட்சம் கோடிக்கு மேல் அக்குழுமத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2-ம் இடம் வகித்து வந்த அதானி, இந்த அறிக்கையால் 26-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில், அதானி குழுமத்துக்கு ரூ.2.26 லட்சம் கோடி கடன் உள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் முதலீட்டாளர்கள் மத்தியில் இழந்த நம்பிக்கையை மீட்க அதானி குழுமம் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கடந்த திங்கள்கிழமை அதானி போர்ட் நிறுவனம் ரூ.1,500 கோடி கடனை திருப்பிச் செலுத்தியுள்ளது. இதில் ரூ.1,000 கோடி எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்துக்கும் ரூ.500 கோடி ஆதித்ய பிர்லா லைப் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.