இலங்கையில் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: ஆகஸ்ட். 26 – இலங்கையில் வசிக்க கூடிய மற்றும் இலங்கை செல்ல இருக்கும் இந்தியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். சுமார் 60 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூட பணம் கொடுக்க முடியாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது. வெளிநாட்டு கடன்களையும் திருப்பி செலுத்துவதை நிறுத்தி உள்ளது. பொருளாதாரத்தை மீட்க அதிபர் ரணில் தலைமையிலான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளும் தீவு நாடான இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி; இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் அல்லது இலங்கை செல்ல நினைக்கும் இந்தியர்களுக்கான பொதுவான வழிகாட்டி நெறிமுறைகளாவது, இந்தியாவுக்கு வெளியே இந்தியர்களுடன் தொடர்புடைய விரும்பத்தகாத சம்பவம் எதுவும் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதே நம்முடைய முயற்சி.
ஆகவே, இலங்கையில் இருக்கும்போது, அனைத்து இந்தியர்களும் கவனத்துடன் மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இலங்கை பயணத்திற்கு முன்பு கரன்சி நோட்டுகளை மாற்றுவது மற்றும் எரிபொருள் சூழ்நிலை உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து காரணிகளை பற்றியும் அவர்கள் நன்றாக ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என கூறினார்.