
கொழும்பு, மார்ச் 15-இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான் கோரிக்கையை ஏற்று, அங்குள்ள தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் நேற்று கையெழுத்தானது. 4 ஆயிரம் வீடுகள் திட்டம் இலங்கையில் நடைபெற்ற போருக்கு பின்னர் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இந்தியாவின் நிதியுதவியுடன் வீடுகள் கட்டித்தரும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இலங்கையில் உள்ள மலையகத்தில் 4 ஆயிரம் வீடுகள் கட்டி தரும் திட்டத்தை முன்னெடுத்தது. அந்தவகையில் ஒரு வீட்டுக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் என நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இதற்கிடையில் பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது ஒரு வீட்டை கட்டுவதற்கு தலா ரூ.28 லட்சம் தேவை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி மந்திரியுமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது. அதன்படி வீடுகள் கட்டும் திட்டத்துக்கான கூடுதல் நிதியுடன் கூடிய உடன்படிக்கை நேற்று கையெழுத்தானது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதரக அதிகாரி கோபால் பாக்லே முன்னிலையில் கையெழுத்தான இந்த உடன்படிக்கை ஒப்பந்தத்தை இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொண்டார்.