இலங்கையில் நெருக்கடியை தீர்க்க ரனில் விக்ரமசிங்கே பிரதமராக வாய்ப்பு

கொழும்பு: மே. 12 –
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடும் இன்னல்களுக்கு உள்ளான மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போராட்டம் தீவிரமாகி தற்போது வன்முறை, அரசியல் நெருக்கடி என அந்நாட்டில் பரபரப்பான சூழல்கள் அரங்கேறி வருகின்றன.
அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி கடந்த மாதம் 9-ந்தேதி மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.
அதிபர் மாளிகை முன்பு உள்ள காலி திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் இலங்கை அரசுக்கு எதிர்க்கட்சிகளும் கடும் நெருக்கடி அளித்தன.
மக்களின் தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந்தேதி ராஜினாமா செய்தார். இதனால் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
போராட்டக்காரர்கள் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மகிந்த ராஜபக்சே வீடு, அவரது ஆதரவாளர்களின் வீடுகள், ஓட்டல்களுக்கு தீ வைக்கப்பட்டன.
வன்முறை சம்பவங்களில் 9 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
வன்முறை சம்பவங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், இடைக்கால அரசு அமைக்க அதிர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை எடுத்து வருகிறார்.
பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அதிபர் கோத்தபய விடுத்த கோரிக்கையை அவர் ஏற்க மறுத்து விட்டார்.
இதனால் இடைக்கால அரசு அமைப்பதில் சிக்கல் உண்டானது. மகிந்த ராஜபக்சே பதவி விலகியதால் புதிய பிரதமராக யாரை நியமிக்கலாம் என்று ஆலோசனை நடந்து வருகிறது.
இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று இரவு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
அப்போது ஒரு வாரத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார். அவர் பேசியதாவது:-
வரலாற்றில் இல்லாத வகையில் நாடு மிகவும் மோசமான நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளது.
இதற்கு தீர்வு காண பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மை கட்சிகளை இணைத்து புதிய அரசாங்கத்தை அமைக்க பலரும் யோசனை தெரிவித்தனர்.
அந்த கருத்துக்களை நான் ஏற்றுக் கொண்டேன். பல மூத்த அமைச்சர்களும், ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இல்லாத புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது.
அதே போல மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்து முழு அமைச்சரவையையும் கலைத்து புதிய அமைச்சரவை நியமிக்க முடிவு செய்தேன்.
கடந்த 9-ந்தேதி மிகவும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. குறுகிய நேரத்தில் நாடு முழுவதும் அமைதியின்மை உண்டானது.
சில மணி நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் 9 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். வீடுகள், சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்டது. நாடு முழுவதும் கொள்ளை அடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை கட்சி பேதங்கள் இன்றி வன்மையாக கண்டிக்கிறேன். வன்முறை சம்பவங்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
நாட்டின் அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பாக உள்ளது.
அதனால் அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயல்படுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு முப்படைகளுக்கும், போலீசாருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர திட்டமிட்ட, ஆணை வழங்கிய மற்றும் பிரசாரம் செய்த அனைத்து தரப்பிற்கும் எதிராக கடுமையான சட்டத்தை அமல்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால் இவ்வாறு வன்முறைகளில் ஈடுபடாமல் தவிர்த்துக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறேன்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை சீர்ப்படுத்தவும், நாடு அராஜக பாதைக்கு செல்வதை தவிர்த்துக் கொள்வதற்கும், அரசு செயல்பாடுகளில் மீட்பு பணியை ஆரம்பிப்பதற்கும், புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.
இந்த வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையை பெற்று நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய பிரதமர் ஒருவர் மற்றும் அமைச்சரவையை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
அதன் பின்னர் பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் கிடைக்கும் விதத்திலான 19-வது திருத்தம் அமல்படுத்தும் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய திட்டத்தை முன் வைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
அதே போன்று பல்வேறு தரப்புகளினால் ஜனாதிபதி முறையை ரத்து செய்யுமாறும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்படும் புதிய அரசாங்கம், நாட்டை ஸ்திரன்மைக்கு கொண்டு வந்ததன் பின்னர் அனைத்து தரப்புடனும் கலந்துரையாடல்களை நடத்தி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த சந்தர்ப்பத்தில் அமைதியாகவும், சிந்தித்தும் செயல்படுமாறு அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கையில் புதிய பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி நிலவி வருகிறது. இதில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரனில் விக்ரமசிங்கேவை நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலையில் இந்த சந்திப்பு இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரதமர் பதவியை ஏற்குமாறு ரனில் விக்ரமசிங்கேவிடம் கோத்தபய ராஜபக்சே வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பிரதமர் பதவிக்கு நிமல் சிறிபால டி சில்வா, விஜேதாச ராஜபக்சே, டலஸ் அழக்பெரும ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது. ஆனாலும் ரனில் விக்ரம சிங்கேவே பிரதமராக வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே முக்கிய எதிர்க்கட்சியான சமாதி ஜன பலவெகயாவின் தலைவர் சஜித் பிரேமதாசா கூறும்போது, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால்தான் பிரதமர் பதவியை ஏற்பதாக தெரிவித்துள்ளார். அதே வேளையில் இடைக்கால அரசின் பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆதரவு அளிப்போம் என்று சமாகி ஜன பலவெகயா கட்சியின் நிர்வாகி ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். அவர் கூறும்போது, தற்போது நிபந்தனைகளை விதித்து பொறுப்பை தட்டிக்கழிக்கும் நேரம் இதுவல்ல.
அரசாங்கம் இல்லாமல் இருந்தால் ஒவ்வொரு நிமிடமும் பேரழிவு ஏற்படும். நாட்டை செயல்பட வைக்க எந்த இடைக்கால பிரதமரையும் ஆதரிப்போம். ஊழல் ராஜபக்சேவின் கீழ் பிரதமராக இருப்பதற்கு சஜித் பிரேமதாசா விரும்பவில்லை என்றார்.