இலங்கை தமிழர் விழாவில்தமிழக முதல்வர் காணொளிக்கு தடை

சென்னை: நவ.6-
இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து மத்திய அரசுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,”ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு அவர்களுக்கு தேவையான தேயிலை காபி ரப்பர் தோட்டங்கள் ஏராளமாக பயிரிடப்பட்டது. அதில் குறைந்த கூலிக்கு வேலை செய்யவும் அங்கு இருந்த வனம் சார்ந்த இடங்களை விவசாயத்திற்கு ஏற்ப பண்படுத்தி பிரிட்டிசாருக்குத் தேவையான விவசாயம் உற்பத்தி சார்ந்த துறைகளில் உழைப்பதற்காகவும் தமிழ்நாட்டு மக்கள் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு கொண்டு போகப் பட்டார்கள்.
தென் தமிழகத்தில் இருந்த அப்பாவி மக்களை வலு கட்டாயமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தியது பிரிட்டிஷ் அரசு. அவர்கள் இலங்கை மலையகத் தமிழர்கள் என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டார்கள். பிரிட்டிஷாரால் வலுக்கட்டாயமாக கொண்டு போகப்பட்டு இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்கள் புலம்பெயர்ந்த 200 வது ஆண்டு தற்போது அனுசரிக்கப்படுகிறது. “நாம் 200 ஒற்றுமை பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்” என்ற பெயரில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சியை இலங்கை மலையக தமிழர்களுக்காக இலங்கையின் உள்நாட்டு தோட்ட தொழில் துறை மற்றும் அரசு தொழில்துறை அமைச்சகம் முன்னெடுத்தது.
இலங்கையில் உள்ள மலையக தமிழர்களின் உறவு பாலமாக இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்னெடுத்த, இந்த நிகழ்ச்சியில் மலையக தமிழர்கள் அவர்களின் பூர்வீக தமிழ் பூமி சார்ந்த அரசியல் பிரதிநிதிகளாக தமிழ்நாட்டிலிருந்தும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இலங்கை அரசின் பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் இந்திய அரசின் சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். தமிழ்நாடு பாஜக தலைவரும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆனால் தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்துரை வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுப்பிய காணொலி உரையை அந்த விழாவில் ஒளிபரப்ப தடை விதித்ததன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சிறுமைப்படுத்துவதற்கு முயன்றுள்ள மத்திய பாஜக அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது கடும் கண்டனத்துக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.