இலங்கை நெருக்கடியில் இருந்து மீள இந்தியா உதவி

புதுடெல்லி: ஜன.21-
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அதிக முதலீடு செய்யப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளது.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 2-நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அவர் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை கொழும்புவில் நேற்று சந்தித்து பேசினார். அண்டை நாடுகளுக்கு முதல் முக்கியத்துவம் அளிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியுடன் இருப்பதால், தான் இலங்கைவந்திருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரி வித்தார்.இந்த சந்திப்பின் போது இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவுள்ளன.
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியையும், ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். சிக்கலான நேரத்தில் இலங்கைக்கு இந்திய துணை நிற்கும் எனவும் அவர் தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார நிலை மேம்பட அங்கு எரிசக்தி, சுற்றுலா மற்றும் கட்டமைப்பு துறைகளில் அதிக முதலீடுகளை இந்தியா ஊக்குவிக்கும் எனவும் அவர் உறுதியளித்தார். இலங்கைக்கான தேவையை நிறைவேற்ற கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது எனவும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.