இலவச திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

புதுடெல்லி:ஏப். 22- இலவச திட்டங்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுப்பாராவ் கூறியிருப்பதாவது:
இந்தியா போன்ற நாடுகள், நலிந்த நிலையில் உள்ள மக்களை பாதுகாக்கும் நோக்கில் இலவசத் திட்டங்களைக் கொண்டு வருகின்றன. ஆனால், அந்தத் திட்டங்களின் செலவினங்கள் குறித்து மக்களிடம் புரிதல் ஏற்படுத்துவது அரசின் கடமை.
அதேபோல், இலவச திட்ட அறிவிப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டும். சில மாநிலங்கள் இலவச திட்டங்களை அறிவித்து நிதி ஒழுங்கை கடைபிடிக்கத் தவறுகின்றன.
எனவே இலவசத் திட்டங்கள் தொடர்பாக பரந்த விவாதம் தேவை. இந்தத் திட்டங்களுக்கு செலவழிப்பதால் என்ன பலன் கிடைக்கும், இந்தப் பணத்தை வேறு திட்டங்களுக்கு செலவிட முடியுமா என்று சிந்திக்க வேண்டும். எனவே, மத்திய அரசு இலவச திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.
சுப்பாராவ் மேலும் கூறுகையில், “இந்தியா 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டுமென்றால், ஆண்டுக்கு 7.6 சதவீத அளவில் வளர்ச்சி காண வேண்டும் என்று சர்வதேச செலாவணி நிதியம் மதிப்பிட்டுள்ளது. இந்த இலக்கு சவால் மிகுந்த ஒன்று.
வளர்ந்த நாடு நான்கு அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும். சிறந்த சட்டங்கள், வலிமையான அரசு, ஐனநாயக பொறுப்புணர்வு, நிறுவனங்கள். நம்மிடம் இந்த நான்கும் இல்லை என்று கூறிவிட முடியாது. அதேபோல், இவற்றை முழுமையாக நாம் கொண்டுள்ளோம் என்றும் சொல்லிவிட முடியாது. நாம் இன்னும் மேம்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.