இளம்பெண்ணை கற்பழித்து தீவைத்து எரித்த கொடூரம்

பிளபிட்: செப்.12
உத்தரபிரதேச மாநிலம் பிளபிட் மாவட்டம் மதோ தண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் 17 வயது கொண்ட இளம்பெண் வசித்து வருகிறார். இவரது தந்தை விவசாயம் செய்து வருகிறார். கடந்த 7-ந்தேதி இளம்பெண்ணின் தந்தை விவசாய வேலைக்காக வயலுக்கு சென்றுவிட்டார். அவரது தாயார் கடந்த சில நாட்களாக மற்றொரு கிராமத்தில் உள்ள தனது பெற்றோருடன் தங்கி இருந்தார்.
எனவே இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அன்று மாலையில் இளம்பெண்ணின் தந்தை வயலில் இருந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது இளம்பெண் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். மகளின் நிலையை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
கடந்த 7-ந்தேதி இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது பிற்பகல் 2.30 மணியளவில் 25 வயதுடைய 2 வாலிபர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அவர்கள் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளனர். ஆனால் இளம்பெண் அவர்களை போலீசில் பிடித்து கொடுப்பதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் இளம்பெண்ணின் உடலில் கொடூரமாக தீவைத்து எரித்து வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த நிலையில் இளம்பெண் லக்னோவில் உள்ள கிங்ஜார்ஜ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார். இதற்கிடையே பரேலி மண்டல ஐஜி ரமித் சர்மா, போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் பிரபு ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் இளம்பெண்ணையும் பார்த்தனர். இளம்பெண்ணை கற்பழித்து எரித்த 2 வாலிபர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.