இளவரசர் ஹாரி அவமதிக்கும் வகையில்நடந்து கொண்டாரா?

லண்டன், செப். 20-இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (வயது 96) கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு நேற்று ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் அரச குடும்பத்தினர் மற்றும் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் அவரது பேரனும், இளவரசருமான ஹாரி அவமரியாதையுடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம், ஹாரி உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பங்கேற்றனர். அப்போது ‘கடவுளே அரசரை காப்பாற்றுங்கள்’ என்ற பாடல் பாடப்பட்டது. இதை அரச குடும்பத்தினர் பாடினர்.
இதில் இளவரசர் ஹாரி மட்டும் அந்த பாடலை பாடவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. பாடல் இசைக்கப்பட்ட போது இளவரசர் ஹாரி அதை பாடாமல் மவுனத்துடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதை சமூக வலைதளங்களில் பலர் விமர்சனம் செய்துள்ளனர். ராணியின் இறுதி சடங்கில் இளவரசர் ஹாரி அவமரியாதையுடன் நடந்து கொண்டதாக பதிவிட்டுள்ளனர். இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையான மேகனை திருமணம் செய்து கொண்ட பிறகு அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின் ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேறினர்.