இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர் மோடி

மதுரை, நவ.10
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் 2018, 2019 ஆண்டுகள் மற்றும் 2019 -2020 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார். இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் 300 நபர்கள் அமர கூடிய வளாகத்திற்கான ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்குகிறார். மேலும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. பட்டமளிப்பு விழாவுக்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் நாளை மதுரை வருகிறார்.
பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விமான நிலைய ஓடுபாதை, கண்காணிப்பு கோபுரம், விமான நிலைய உள்வளாகம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்கள், விமான நிலைய உள்வளாகத்திற்குள் நேற்று முதல் 11-ந்தேதி வரை 3 நாட்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 12-ந்தேதியில் இருந்து வழக்கம்போல், பார்வையாளர்கள் உள்வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்