இளையராஜா பாத்திரத்தில் தனுஷ்

சென்னை ஆக.3 – தமிழ் திரையுலகில் இசை ஜாம்பவானாக வலம் வரும் இளையாராஜா வாழ்க்கை சினிமா படமாக தயாராக உள்ளது. இந்த படத்தை பிரபல டைரக்டர் ஆர்.பால்கி இயக்க இருப்பதாகவும், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பால்கி ஏற்கனவே இந்தியில் பா, ஷமிதாப், பேட்மேன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
இதுகுறித்து பால்கி அளித்த பேட்டியில், “கடந்த சில வருடங்களாக பிரபலங்களின் வாழ்க்கை திரைப்படங்களாக வந்துள்ளன.
அந்த வகையில் இளையராஜாவின் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது.
இளையராஜா மூன்று தலைமுறைகள் 1,000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள தலைசிறந்த இசையமைப்பாளர் ஆவார். பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் இருக்கிறார். அவரது வாழ்க்கை படத்தை எடுத்தால் அதில் நடிக்க தனுஷ் பொருத்தமாக இருப்பார்.
திரையில் இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன். இந்த படத்தில் தனுஷை நடிக்க வைப்பதுதான் அவருக்கு நான் கொடுக்கும் மிக சிறந்த பரிசாக இருக்கும். காரணம் என்னைப்போலவே தனுசும் இளையராஜாவின் தீவிர ரசிகர்’’ என்றார். இளையராஜா வாழ்க்கை சினிமா படமாக தயாராக இருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.