இவிஎம் தரவுகளை 3 ஆண்டு பாதுகாக்க வேண்டும்: கபில் சிபல் வலியுறுத்தல்

புதுடெல்லி: மே. 25 வாக்குப்பதிவு இயந்திரங்களின் (இவிஎம்) தரவுகளை 3 ஆண்டுகள் வரை பாதுகாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மாநிலங்களவை எம்பி கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள தரவுகள் தேர்தல் முடிவுக்குப் பிறகான ஒரு மாத கால அளவுக்கு மட்டுமே பாதுகாக்கப்படுகின்றன. இந்நிலையில் அந்தப் பதிவுகள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை பாதுகாக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தரவுகளை பாதுகாப்பது மிகவும் அவசியம். அந்தத் தரவுகள்தான், எத்தனை மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது எத்தனை மணிக்கு முடிவடைந்தது, எத்தனை மணிக்கு வாக்கு செலுத்தப்பட்டது உள்ளிட்டவிவரங்களைத் தரக்கூடியது.
இவை முக்கியமான ஆதாரங்கள். எனவே, இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். அதேபோல், வாக்குப்பதிவு தொடர்பான விவரங்களை வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக மக்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம். இது தொடர்பான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.