இஸ்ரேலுக்கு ஆயுத உதவி கிடையாது: பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்: மே 9: தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரைக் கைப்பற்றும் முனைப்பில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துமேயானால் இனி அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்கப்படாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலி மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் திடீர் தாக்குதலில் 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். சில வெளிநாட்டினர் உள்பட பலர் கடத்திச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் இஸ்ரேல் காசா மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தது. வான்வழித் தாக்குதலாக ஆரம்பித்து தரைவழித் தாக்குதலிலும் இறங்கியது. காசாவில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள். காசாவில் கடுமையாக மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை ஐ.நா. உள்பட சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையில் இஸ்ரேல் உடனான தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் அண்மையில் ஒப்புதல் அளித்தது. எகிப்து மற்றும் கத்தார் நாடுகளின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
ஆனாலும் இஸ்ரேல் தொடர்ந்து எகிப்து எல்லையை ஒட்டிய தெற்கு காசாவின் ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலை நடத்தி வருகிறது. “வடக்கு காசா, மத்திய காசாவில் ஹமாஸ் குழுக்களை கட்டுப்படுத்திவிட்டோம். தெற்கில் ஹமாஸ் குழுவினர் மக்களோடு மக்களாகப் பதுங்கியுள்ளனர். அவர்களை அழிக்காவிட்டால் போர் முழுமை பெறாது” என்று இஸ்ரேல் அதிரடி காட்டி வருகிறது.
இந்நிலையில், “ரஃபாவுக்குள் முன்னேறினால் இனிமேல் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கப் போவதில்லை என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். புதன்கிழமை சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.