இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்: நெதன்யாகுவிடம் மோடி உறுதி

புதுடெல்லி: அக்.11-பாலஸ்தீன எல்லையில் தொடரும் போர் பிரச்சினை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் நேற்று தொடர்பு கொண்டு பேசினார். ‘‘இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள், இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கின்றனர். தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்தியா கடுமையாகவும் சந்தேகத்துக்கு இடமின்றியும் கண்டிக்கிறது’’ என்று அப்போது, நெதன்யாகுவிடம் மோடி தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். சுமார்5 ஆயிரம் ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதலை இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தொடங்கினர். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது.
பதிலுக்கு இஸ்ரேலும் தனது தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது. இரு தரப்பிலும் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.இந்நிலையில், ஹமாஸ் படை வசம் இருந்த காசா எல்லை பகுதி, தெற்கு பகுதிகளை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தொடர்ந்து 4-வது நாளாக இரு தரப்புக்கும் இடையே போர் நீடித்து வருகிறது.இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, இஸ்ரேலில் உள்ள நிலைமை குறித்து பிரதமர் மோடியிடம், நெதன்யாகு விளக்கினார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தொலைபேசி அழைப்புக்கும், இஸ்ரேலில் தற்போதைய நிலைமை குறித்து தெரிவித்ததற்கும் நன்றி.இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள், இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கின்றனர் என்றும், தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்தியா கடுமையாகவும் சந்தேகத்துக்கு இடமின்றியும் கண்டிப்பதாகவும் நெதன்யாகுவிடம் உறுதிபட தெரிவித்துள்ளேன்.இவ்வாறு பிரதமர் மோடி அதில் பதிவிட்டுள்ளார்.