இஸ்ரேல் இடைவிடாத தாக்குதல் – ஐ.நா. வேதனை

காசா நகர்: நவ.6-
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. காசாவில் இஸ்ரேலியப் படைகள் இடைவிடாது தாக்குதல் நடத்துவதால் அங்கு மீண்டும் தொலைத்தொட்ர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒரே மாதத்தில் 3வது முறையாக இவ்வாறு தொலைத்தொடர்பு அங்கு முடக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காசாவில் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
48 மணி நேரம் தான்! இதற்கிடையில் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி செய்தியாளர்களை சந்தித்தபோது, “காசாவில் வடக்கு, தெற்கு எல்லாம் இப்போது இல்லை. மொத்த காசாவும் இரண்டாகப் பிரிந்துள்ளது. நாங்கள் காசாவை சூழ்ந்துவிட்டோம். இன்னும் 48 மணி நேரம் தான் காசா நகருக்குள் இஸ்ரேலியப் படைகள் நுழைந்துவிடும்” என்று எச்சரித்துள்ளார்.
பலி எண்ணிக்கை எவ்வளவு? ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில் இதுவரை 9700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 4000-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். இஸ்ரேலில் 1400 பேர் பலியாகியுள்ளனர். 242 பேர் ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.
ராஜினாமா செய்யுங்கள் – ஒரு தந்தையின் கொந்தளிப்பு: போர் தீவிரமடைந்துவரும் சூழலில்ஹமாஸ் படையினரால் பிணைக் கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட தனது மகள் கொல்லப்பட்டதையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பதவியை ரானினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டைச் சேர்ந்த முக்கிய தொழில் முனைவோர் இயான் வால்ட்மேன். இவர் தொழில்நுட்ப நிறுவனம் வைத்துள்ளார்.

இஸ்ரேலிய கம்பெனி ஒன்றில் முதன்முறையாக பாலஸ்தீனரைப் பணியமர்த்தியதற்காக அவர் அறியப்பட்டார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலில் இவரின் மகள் கடத்தப்பட்டார். ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியதால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இயான் வால்ட்மேன் வலியுறுத்தியுள்ளார். தன் மகள் உயிர் பறிபோனதற்கு பிரதமரே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.ஒரே போரில் இத்தனை பேரா? காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 88 ஐ.நா. ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. இன்று (திங்கள் கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் UNRWA என்ற பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமையைச் சேர்ந்தவர்களாவர். ஒரே போரில் இத்தனை ஐ.நா. ஊழியர்கள் உயிரிழிந்திருப்பது வேதனை என்று ஐ.நா. தெரிவ்த்துள்ளது. மேலும், தற்போதைய சூழலில் மனிதாபிமான அடிப்படையில் காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.