இஸ்ரேல் குற்றம்சாட்டும் ‘பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்’ குழுவின் பின்னணி

காசா: அக். 19-
காசாவின் அல்-அஹ்லி மருத்துவமனை மீதான ஏவுகணைத் தாக்குதலில் 500 பேர் பலியாகியிருப்பது உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என ஹமாஸ், பாலஸ்தீன அதிகாரிகள் குற்றம்சாட்ட, அதை திட்டவட்டமாக மறுக்கும் இஸ்ரேல், இந்தத் தாக்குதலுக்கு ‘பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்’ குழு தான் முழு காரணம் எனக் குற்றம் சுமத்தியுள்ளது. பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியுற்று தவறுதலாக காசாவின் அல்-அஹ்லி மருத்துவமனை மீது தாக்கியுள்ளது எனக் கூறியுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை, தாக்குதலுக்கு முன்பும், பின்பும் மருத்துவமனையின் காட்சிகள் என்று கூறி ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் யார்? – இஸ்ரேல் குறிப்பிடும் இஸ்லாமிய ஜிஹாத், அதிகாரபூர்வமாக பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சன்னி பிரிவு இஸ்லாமியக் குழு. இதை நிறுவியவர்கள் ஃபாத்தி ஷாககி மற்றும் அப்துல் அஜிஸ் அவ்தா என்பவர்கள். இவர்கள், எகிப்தில் 1928-ல் ஹசன் அல்-பன்னாவால் நிறுவப்பட்ட சன்னி பிரிவு இஸ்லாமிய சமூக இயக்கத்தின் மாணவர்கள். ஈரானியப் புரட்சியில் இருந்து உத்வேகம் பெற்ற இருவரும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை எதிர்க்கவும், ஒரு சுதந்திர பாலஸ்தீனிய அரசை நிறுவவும் ஒரே வழி இஸ்ரேலை அழித்தொழிப்பது என்ற ஒற்றை நோக்கத்துடன் ஷாககி, அவ்தா இருவரும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் என்ற அமைப்பை எகிப்தில் தோற்றுவித்தனர். ஆனால், 1981-ல் எகிப்து அரசு, இந்த இஸ்லாமிய ஜிஹாத்தைச் சேர்ந்தவர்களை நாடு கடத்தியது.