இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் தீவிரம்

ஜெருசலேம்,அக் 10- இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையேயான உக்கிரமான மோதலில் 3 நாட்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,600ஐ கடந்துள்ளது. மறுபுறத்தில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டுகளை வீசினால் பணைய கைதிகளை கொன்றுவிடுவோம் என ஹமாஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.கடந்த 7ம் தேதி அதிகாலை இஸ்ரேல் நகரங்கள் மீது வெறும் 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவி ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது. அத்துடன் இன்றும் பல ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் நகரங்களில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக கடந்த 8ம் தேதி போர் தொடங்குவதாக அறிவித்த இஸ்ரேல், தற்போது காசா நகரம் மீது இடைவிடாது குண்டுகளை வீசி வருகிறது. இதனால் தொடர்ந்து வெடிச் சத்தம் கேட்டபடியே உள்ளது. பெரிய பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் சில நிமிடங்களில் கட்டிட குவியல்களாக மாறி வருகின்றன.இஸ்ரேல் நகரங்கள் மீது நடத்திய தாக்குதல் மற்றும் நகரங்களுக்குள் ஊடுருவி சென்று, ஹமாஸ் இயக்கத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இதுவரை 900க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மறுபுறத்தில் காசா மீது இஸ்ரேலிய வான் படை நடத்தி வரும் தாக்குதலில் 700க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.மேலும் இஸ்ரேலுக்கு வந்த 11 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 9 பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.தொடர்ந்து 4வது நாளாக நடைபெற்று வரும் தாக்குதலில் சுமார் 5,000 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனிடையே காஸாவில் பொதுமக்கள் வாழும் பகுதியில், முன்னறிவிப்பு அளிக்காமல் குண்டுகளை வீசினால் பணைய கைதிகளை கொன்று விடுவோம் என்று ஹமாஸ் இயக்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கைதிகளை கொன்று வீடியோவும் வெளியிடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.