ஸ்ரீஹரிகோட்டா: ,செப். 23: ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவுக்கு நிலங்களை வழங்கியவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஒரு தனித்தீவில் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து தான் ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகின்றன. ஆந்திரா-தமிழக கடல் எல்லையில் சென்னைக்கு வடக்கே சுமார் 43 மைல்தூரத்தில் இஸ்ரோ மையம் உள்ளது.
இதற்காக கடந்த 1969-ம் ஆண்டு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. கிழக்கு நோக்கிய ஏவுதிசை, பூமியின் சுழற்சி, மத்திய நேர்க்கோட்டிற்கு நெருக்கமான இடம் மற்றும் அதிக குடிமக்கள் இல்லாத பாதுகாப்பு பகுதி எனும் பல்வேறு காரணங்களுக்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இது கடற்கரையில் 27 கி.மீ நீளம் கொண்டதாகும். மொத்தம் 145 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட ஒரு தீவாகும்.இஸ்ரோ மையம் அமைவதற்கு முன் இப்பகுதியில் சவுக்கு தோப்புகளும், யூக்கலிப்டஸ் மரங்களும், ஆங்காங்கே நெற்பயிர்களும் பயிரிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரோ மையம் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) கட்டுப்பாட்டில் உள்ளதால், இங்குயாரும் அனுமதியின்றி நுழைய முடியாது. சுமார் 14 ஆயிரம் பேர் 24 மணிநேரமும் ஆயுதம்தாங்கி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் எனும் எச்சரிக்கை உள்ளதாலும், நாட்டிற்கு மிக முக்கியமான ராக்கெட் ஏவுதளம் என்பதாலும் இங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இஸ்ரோ அமைவதற்கு முன் இங்கு வசித்து வந்தவர்கள் பெரும்பாலானோர் விவசாயிகள், மீனவர்கள். பல ஏக்கர் நிலங்களுக்கு இவர்கள் சொந்தக்காரர்களாக இருந்தனர்.1969-ல் இந்த இடத்தை இஸ்ரோவுக்கு தேர்வு செய்த பின்னர், கூடூரு தொகுதியில் உள்ள வாகாடு, சிட்டமூர் ஆகிய இரு மண்டலங்கள் மற்றும் சூலூர் பேட்டை தொகுதியில் உள்ள சூலூர் பேட்டை மற்றும் துரைவாரி சத்திரம் ஆகிய இரு மண்டலங்கள் என மொத்தம் 9 பஞ்சாயத்துகளில் இவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு ஓரளவு பணமும் கொடுக்கப்பட்டது. இதனால் அவர்கள் சொந்த ஊர்களை காலி செய்து விட்டு, தற்போது சுமார் 9 பஞ்சாயத்துகளில் 37,500 பேர் வசித்து வருகின்றனர். இஸ்ரோவுக்கு மிக அருகில் புலிகாட் சரணாலயமும் உள்ளது. இது கடந்த 1996ல் துவங்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் உள்ள பறவைகளின் சரணாலயமும் 1996ல் வன விலங்குகளின் சரணாலயமாக பெயர் மாற்றம் அடைந்தது.
இதனை தொடர்ந்து 2002 முதல் 2005 வரை புதிய நிபந்தனைகள், சட்டங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டன. தார் சாலை அமைக்க கூடாது, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆழ்துளை கிணறுகள் போடக்கூடாது. சத்தம் வரும் மோட்டார்களை உபயோகப்படுத்த கூடாது. லாரி, ஜேசிபி, கிரேன்கள் போன்ற கனரக வாகனங்கள் ஏதும் ஊருக்குள் வரக்கூடாது என வனத்துறை சட்டங்கள் தீவிரமாக்கப்பட்டது. இதனால் மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல், விவசாயிகளாக இருந்தவர்கள், இஸ்ரோவுக்கு தங்களின் நிலங்களை வழங்கிய பிறகு,விவசாய கூலிகளாக பணிக்கு செல்ல ஆரம்பித்தனர்.