இஸ்ரோ தலைவரின் சம்பளம்: விவாதமாக மாறிய ஹர்ஷ் கோயங்காவின் டுவீட்

புதுடெல்லி, செப். 13- ஆர்.பி.ஜி. குழுவின் சேர்மன் ஹர்ஷ் கோயங்கா. இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மக்களை உத்வேகம் அளிக்கும் வகையிலான மற்றும் சுவாரஸ்யமான கருத்துகளை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் சம்பளம் குறித்த பதிவு ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் சோம்நாத் மாதம் 2.5 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார். அவர் அர்பணிப்பிற்கு தான் தலைவணங்குகிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் ‘’சோமநாத்தின் மாத சம்பளம் 2.5 லட்சம் ரூபாய். இது சரியா அல்லது நியாயமா?. அவரைப் போன்றவர்கள் பணத்திற்கு அப்பாற்பட்ட காரணிகளால் உந்தப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்வோம். அவர்கள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் மீதான ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புக்காகவும், தங்கள் நாட்டின் பெருமைக்காகவும், தங்கள் நாட்டின் பங்களிப்பிற்காகவும், தங்கள் நோக்கத்தை அடைவதில் தனிப்பட்ட நிறைவுக்காகவும் செய்கிறார்கள். அவரைப் போன்ற அர்ப்பணிப்புள்ள மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரோ தலைவரின் சம்பளம் இவ்வளவுதான? என விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், சோம்நாத் போன்ற தலைவர்களின் அர்ப்பணிப்பு குறித்து நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இஸ்ரோ நிலவின் தென்துருவத்திற்கு ரோவரை அனுப்பி சாதனைப்படைத்தது. நிலவில் கால் பதித்த 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மூலம் கிடைத்தது என்றால் அது மிகையாகாது.