இஸ்ரோ தலைவருக்கு முதல்வர் வாழ்த்து

பெங்களூரு ஆக.23:-சந்திரயான் 3 வெற்றி பெற்றதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு முதல்வர் சித்தராமையா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக முதல்வர் கூறும் போது
நிலவின் தென்துருவ மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை தரையிறக்கி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. சந்திரயான் 3 திட்டம் இந்தியாவின் பல வருட கனவு. அனைத்து இந்தியர்களின் கனவையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைவேற்றியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
விண்வெளி அறிவியலை அதன் ஆரம்ப காலத்தில் ஆதரித்து உதவிய நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை நினைவு கூர்வது நமது கடமையாகும். நாட்டின் விஞ்ஞானிகளின் தொடர் முயற்சிகளும், பல தசாப்த கால கடின உழைப்பும் இன்று பலனளித்துள்ளது என்றார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம். இந்த அசாதாரண சாதனையை நிகழ்த்திய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
விண்வெளித் துறையில் உலகின் முன்னணி நாடுகளில் இந்தியா மீண்டும் பிரகாசித்துள்ளது. இஸ்ரோவின் எதிர்கால முயற்சிகளுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் கூறினார்