ஈகுவடாரில் அவசர நிலை பிரகடனம்

குயிட்டோ,ஆக. 11: தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த தேர்தலில் 8 பேர் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இதில் முன்னாள் எம்.பி.யான பெர்னாண்டோ வில்லவிசென்சியோவும் (வயது 59) ஒருவர். பில்டு ஈகுவடார் இயக்கம் என்ற கட்சி சார்பில் போட்டியிட்ட இவர் அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராக கடந்த 2007-ம் ஆண்டு முதல் குரல் கொடுத்து வந்தார். எனவே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இவருக்கு பிரகாசமாக இருந்தது. இந்த நிலையில் தலைநகர் குயிட்டோவில் பெர்னாண்டோ தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். பிரசாரத்தை முடித்துவிட்டு காரில் ஏற முயன்றார். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த மர்மநபர் பெர்னாண்டோவை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பி ஓடினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு அந்த நாட்டின் அதிபர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலையும், கண்டனத்தையும் தெரிவித்தனர். இதுகுறித்து அதிபர் கில்லர்மோ லாஸ்சோ கூறுகையில், `சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. எனவே நிச்சயம் அவர் தண்டிக்கப்படுவார். சட்டத்தின் முழு பலமும் குற்றவாளி மீது காட்டப்படும்’ என தெரிவித்தார். மேலும் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் எனவும் அவர் கூறினார். இதற்காக நாடு முழுவதும் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதி மற்றும் சுதந்திரமான தேர்தலுக்கு உத்தரவாதம் அளிக்க நாடு முழுவதும் அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.