ஈராக்கில் சந்தையில் பயங்கர குண்டு வெடிப்பு; 25 பேர் பலி

பாக்தாத், ஜூலை 21- ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கத்தை அமெரிக்க படைகளின் உதவியோடு ஈராக் கடந்த 2018-ம் ஆண்டு கட்டுக்குள் கொண்டுவந்தது.‌ ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டதாக ஈராக் அறிவித்தது. ஆனால் அண்மைகாலமாக ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. குறிப்பாக தலைநகர் பாக்தாத்தில் அவர்கள் அடிக்கடி பயங்கரவாத‌ தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.‌
இந்த நிலையில் பாக்தாத்தின் வடக்கு பகுதியில் சதர் நகரில் உள்ள மிகப்பெரிய சந்தையில் நேற்று முன்தினம் இரவு மக்கள் பக்ரீத் கொண்டாட்டத்துக்கான பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. கரும்புகை மண்டலம் உருவானது. சந்தையில் இருந்த ஏராளமான கடைகள் தீக்கிரையாகின. பீதியடைந்த மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த பயங்கர குண்டுவெடிப்பில் சிக்கி 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எஸ். பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தி இருப்பார்கள் என ஈராக் அரசு குற்றம் சாட்டியுள்ளது.