ஈரான் – இந்தியா இடையே ஒரு வாரம் முன் உருவான முக்கிய ஒப்பந்தம்

டெல்லி, மே 20- இந்தியா- ஈரான் உறவில் அதிருப்தி நிலவியதை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் கடந்த வாரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சபாஹர்- ஷாஹித் பெஹெஸ்தி துறைமுக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஈரானுடனான சாபஹர் துறைமுக ஒப்பந்தத்தால் சீனா, பாகிஸ்தான் நாடுகள் கடும் அதிர்ச்சியடைந்தன. அத்துடன் இந்தியா மீது அமெரிக்காவும் பொருளாதாரத் தடை விதிக்கப் போவதாக எச்சரித்திருந்தது. சர்வதேச வர்த்தகப் பாதையில் பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகம், ஈரானின் சபாஹர் (சாபஹர், சபஹார்) துறைமுகம் ஆகியவை மிக முக்கியமானவை. குறிப்பாக வளைகுடா நாடுகளுடனான எண்ணெய் வர்த்தகப் பாதையில் இந்த இரு துறைமுகங்கள் அதிமுக்கியமானவை. சபாஹர் துறைமுகமானது ஈரான் மற்றும் ஆப்கனிஸ்தான் ஆகிய இரு நாடுகளை இணைக்கக் கூடியதாகும். சாபஹர் துறைமுகம்: பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை சீனா கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால்தான் சாபஹர் துறைமுகத்தில் ஈரானுடன் இணைந்து இந்தியா நிலைகொண்டிருந்தது. 2003-ம் ஆண்டுதான் சாபஹர் துறைமுக மேம்பாட்டுக்காக இந்தியாவும் ஈரானும் முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மோடியின் ஈரான் பயணம்: பிரதமர் மோடி 2016-ம் ஆண்டு இந்தியா சென்ற போது சாபஹர் துறைமுக ஒப்பந்தத்துக்கு முழுமையான ஒப்புதல் வழங்கப்பட்டது. 2019-ம் ஆண்டு சாபஹர் துறைமுகத்தில் இருந்து ஆப்கான் வழியாக இந்தியாவுக்கு பொருட்கள் கொண்டுவரப்பட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. உறவில் விரிசல்: ஆனால் 2020-ம் ஆண்டு முதலே ஈரான், இந்தியா உறவில் விரிசல்கள் விழத் தொடங்கின. சாபஹர் துறைமுகத் திட்டத்தில் இருந்து இந்தியாவை விலக்கிவிட்டதாக ஈரான் அறிவித்தது. இதன் பின்னர் இந்தியா- ஈரான் உறவில் அடுத்தடுத்து உரசல்கள் இருந்து வந்தன.
ரைசியுடன் மோடி சந்திப்பு: 2023-ம் ஆண்டு இந்தியா- ஈரான் உறவில் மீண்டும் நட்பு மலரத் தொடங்கியது. 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 15-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்கு இடையே ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போதும் சாபஹர் துறைமுகம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி, ரைசியுடன் விவாதித்தார். மோடி- ரைசி பேச்சுவார்த்தை: பின்னர் இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி, ஈரான் அதிபர் ரைசியை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் சிக்கலான சூழ்நிலை, இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அப்போதும் கூட பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக ஈரானில் உள்ள சாபஹர் துறைமுகத்திற்கு ஈரான் அளித்து வரும் முக்கியத்துவம், முன்னுரிமை குறித்து பிரதமர் மோடி ஆலோசித்திருந்தார். இன்னொரு பக்கம், இஸ்ரேல்- ஈரான் இடையேயான மோதலில் இந்தியாவின் சில நிலைப்பாடுகள் இருதரப்பு உறவில் சற்று அதிருப்தியையும் உருவாக்கி இருந்தது. ஷாஹித் பெஹெஸ்தி துறைமுகம்: இந்த பின்னணியில் கடந்த ஜனவரி மாதம், ஈரான் அதிபர் ரைசியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். அப்போதும் சாபஹர் துறைமுகத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் 2016-ம் ஆண்டு கையெழுத்தான சாபஹர் துறைமுகம் அருகே உள்ள ஷாஹித் பெஹெஸ்தி துறைமுக மேம்பாட்டு ஒப்பந்தம் குறித்தும் இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர். ஷாஹித் பெஹெஸ்தி துறைமுகம், ஈரானின் 2-வது மிகப் பெரிய துறைமுகமாகும். கடந்த வாரம் போட்ட ஒப்பந்தம்: இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ஈரான் சென்ற மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த் சோனோவால், ஷாஹித் பெஹெஸ்தி துறைமுக மேம்பாடு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சாபஹர், ஷாஹித் பெஹெஸ்தி துறைமுகங்கள் மூலமாக மத்திய ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் போக்குவரத்து மேலும் எளிதாகிவிடும். இது சீனா, பாகிஸ்தானுக்கு மிகப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுவதால் இந்த இரு நாடுகளும் கடும் அதிர்சியடைந்தன.
அமெரிக்க பொருளாதாரத் தடை: இன்னொரு பக்கம், ஈரான் நாட்டை பரம எதிரியாக வைத்திருக்கும் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கும் என எச்சரிக்கைகள் ஓயாமல் கேட்டுக் கொண்டே இருந்தன. சாபஹர் துறைமுகத்தின் பூகோள முக்கியத்துவம் குறித்து அமெரிக்காவே பல முறை பேசியிருப்பதாகவும் இந்திய தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. ஏற்கனவே இந்தியா- ஈரான் நெருக்கமான உறவில் அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்த நிலையில் கடந்த வாரம் போடப்பட்ட இந்த ஒப்பந்தம் அமெரிக்கவை மிகவும் அதிருப்தி அடைய வைத்திருந்தது. புதிய அத்தியாயம்?: தற்போது ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் ரைசி மரணித்துவிட்டார். கடந்த வாரம் இந்தியாவுடன் ரைசி உருவாக்கி வைத்துவிட்டுப் போன ஒப்பந்தம் இந்தியா- ஈரான் உறவில் புதிய சரித்திரத்தை எழுதும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.