
தெஹ்ரான், அக். 7- மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் சர்வதேச பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருகிறது. இதனால் அங்குப் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கரன்சி மதிப்பும் தாறுமாறாகச் சரிந்து வருகிறது. இதற்கிடையே தினசரி பரிவர்த்தனைகளை எளிமையாக்கும் வகையில் ஈரான் அரசு, தனது கரன்சிகளில் இருக்கும் நான்கு ஜீரோக்களை நீக்க முடிவு செய்துள்ளது. மத்தியக் கிழக்கில் மிக முக்கிய நாடுகளில் ஒன்றாக ஈரான் இருக்கிறது. சுமார் 9 கோடி மக்கள் தொகையுடன் உள்ள ஈரான் பொருளாதாரம் கடந்த சில காலமாகவே மோசமாக இருக்கிறது. அணு குண்டு ஆராய்ச்சி உள்ளிட்ட காரணங்களால் ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஏகப்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. 4 ஜீரோக்களை நீக்கும் ஈரான் இதனால் ஈரான் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஈரானில் விலைவாசியும் எக்குத்தப்பாக அதிகரித்துள்ளது. இதனால் ஈரான் நாட்டினர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே பணவீக்கத்தைச் சமாளிக்க ஈரான் நாடாளுமன்றம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது ஈரான் அரசு, தங்கள் ரியால் கரன்சியில் இருந்து நான்கு பூஜ்ஜியங்களை நீக்கும் திட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது சர்வதேச நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஈரானின் நாணயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் மதிப்பும் கடுமையாகச் சரிந்திருந்தது. இதனால் தினசரி பரிவர்த்தனைகளுக்கே பல லட்சம் ரியால் கொடுக்க வேண்டி இருந்தது. இது தினசரி பரிவர்த்தனைகளைக் கடினமாக மாற்றியது. இதைக் கருத்தில் கொண்டே ஈரான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஈரான் நாடாளுமன்றக் குழு இரண்டு மாதத்திற்கு முன்பே ஈரான் நாடாளுமன்றக் குழு இந்த மசோதாவை கொண்டு வந்திருந்தது. இருப்பினும், சில காரணங்களால் அப்போது இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இப்போது இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த மசோதா கொண்டு வரப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவை நிறைவேற்றினர். பரிவர்த்தனைகளை எளிதாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


















