
தெஹ்ரான், ஜூன் 13- ஓமன் கடலோர பகுதியில் எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்ததற்கு ஈரானே காரணம் என அமெரிக்கா கூறி இருந்த நிலையில், ஈரான் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அண்மையில் ஓமன் கடற்பகுதியில் இந்திய மாலுமிகள் அதிகம் நிறைந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதில் ஒரு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். ஆதித்ய சர்மா, சிவானந்த் சவுரேஸியா, தலைமை பொறியாளர் பட்னாலா சுரேஷ் ஆகியோர் உயிரிழந்த நிலையில், இது குறித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இருந்து சென்ற இந்திய கப்பல்கள் மீது அவர்கள் (ஈரான்) மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலை ஏற்றுக் கொள்ளவே முடியாது” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஈரான் தலைமை செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்திய வணிகக் கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய கொடூரமான தாக்குதல்களில் மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
















