ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டி: திமுக அறிவிப்பு

சென்னை: ஜன. 20-
தமிழ்நாட்டில், அடுத்த மாதம் 27ம் தேதி, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. எனவே, காங்கிரசுக்கு இத்தொகுதியை ஒதுக்கி, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது. அக்கட்சியின் சார்பில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகனும், பெரியாரின் பேரனுமான திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 4ம் தேதி, மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அந்தக் கூட்டத்தை தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, அறிவாலயத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்பி, முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, திமுக வெளியிட்டுள்ள அறிக்கை: 2023ம் ஆண்டு வரும் பிப்ரவரி 27ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலையொட்டி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து பேசி, ஏற்கனவே 2021ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காரணத்தால், தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்தாலும், திமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக மூத்த தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொறுப்பாளர்களை நியமிப்பதோடு, தேர்தல் பிரசாரம் செய்வது, திமுகவே போட்டியிடுவதாக நினைத்து முழு மூச்சுடன் தேர்தல்களை மேற்கொள்வது என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்த தொகுதியில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து மாநில நிர்வாகிகளுடன் கே.எஸ்.அழகிரி நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். இந்த தொகுதியைப் பொறுத்தவரை ஈவிகே.எஸ் இளங்கோவன் போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும், மூத்த தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு இளங்கோவனும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலிடத்துக்கு அவரது பெயரை அனுப்ப கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு நகர், பெரியாரின் சொந்த ஊராகும். இதனால் இந்த தேர்தலில் நிற்க வேண்டும் என்று இளங்கோவனின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். திமுக ஆட்சி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறது. இதனால், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களிடம் தனித்த செல்வாக்கு உள்ளது. குறிப்பாக மேற்கு மண்டலத்தில் மக்களிடம் திமுக ஆட்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. இதனால் இந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.