ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

சென்னை: ஜனவரி. 23 – சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து பிப்ரவரி27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணி சார்பில் காங்கிரசுக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அல்லது அவரது 2வது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது. இதனிடையே, இடைத்தேர்தலில் தான் போட்டியிடவில்லை.

தனது 2-வது மகன் சஞ்சய் சம்பத்துக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்தார். இதனால் சஞ்சய் சம்பத் வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. பின்னர், திடீரென ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனே போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்து பேசி வாழ்த்து பெற்றார்.தற்போது, கூட்டணி கட்சி என்ற முறையில் முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று வருகிறார். நேற்றைய தினம் திமுக சார்பில் இருந்து அமைச்சர்கள் பலரும் வாக்கு சேகரிக்கும் முனைப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை பெற்றார். இந்த சந்திக்கு பின்னர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனையும், ஆதரவையும் பெற உள்ளார்.