உக்ரைனில் படித்த மாணவர்கள் கல்வியை தொடர மாற்றுத் திட்டம்

புதுடெல்லி, செப். 8-உக்ரைன் போர் காரணமாக, அங்கு படித்த இந்திய மருத்துவ மாணவர்கள் தாய்நாடு திரும்பினர். இவர்கள் தங்கள் மருத்துவ படிப்பை நிறைவு செய்ய, மத்தியஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். உக்ரைனில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தவர்கள் தங்கள் மருத்துவ படிப்பை வேறு நாடுகளின் மருத்துவ கல்லூரிகளில் நிறைவு செய்யவும், அவர்களின் மருத்துவ படிப்புக்கான பட்டத்தை மாணவர்கள் தாங்கள் பயின்ற உக்ரைன் பல்கலைக்கழகம் வழங்கும் திட்டத்தையும் உக்ரைன் அறிவித்தது. இந்த திட்டத்தை அங்கீகரிக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தேசிய மருத்துவஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைன் அனுமதித்துள்ள இடம்பெயர் கல்வி திட்டம் குறித்து வெளியுறவுத்துறையுடன் தேசிய மருத்துவ ஆணையம் ஆலோசித்தது. இந்த தற்காலிக கல்வி திட்டத்தில், உலகெங்கிலும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் உக்ரைனில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் தங்கள் கல்வியை நிறைவு செய்யலாம். இதற்கான பட்டத்தை அந்த மாணவர்கள், உக்ரைனில் தாங்கள் படித்த பல்கலைக்கழகங்களில் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்துக்கு தேசிய மருத்துவ ஆணையம் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.