ஒட்டாவா, செப்.23-
உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு முதல் முறையாக கனடா சென்றுள்ள ஜெலன்ஸ்கி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ரஷியாவின் ஆக்கிரமிப்பு நமது வெற்றியின் மூலம் முடிவுக்கு வர வேண்டும். உக்ரைனில் மீண்டும் ஒரு இனப்படுகொலையை நிகழ்த்த முயற்சி செய்யாத வகையில் ரஷியா நிரந்தரமாக தோற்கடிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் கனடா அரசு வழங்கிய ராணுவ உதவி மற்றும் பொருளாதார உதவிகளால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்ததற்காக கனடா அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.
முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரோடோ பேசுகையில், “நேட்டோ உள்ளிட்ட நமது கூட்டாளிகளுடன் இணைந்து உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம். உக்ரைனுக்கு அடுத்த வருடமும் தொடர்ந்து கனடா அரசு பொருளாதார உதவிகளை வழங்கும். ஆனால் நாங்கள் விரும்புவது உக்ரைனுக்கு நீண்ட காலத்திற்கு ராணுவ உதவிகளோ அல்லது பொருளாதார உதவிகளோ தேவைப்படாத வகையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்பது தான். ஆனால் அந்த அமைதி ஆக்கிரமிப்பாளர்களால் வழங்கப்படும் போலியான சமரசங்களால் ஏற்படாது. நிரந்தரமான அமைதி என்பது ராணுவத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல் அண்டை நாடுகளின் எல்லைகளை மதிக்கும் வகையில் இருக்க வேண்டும். உக்ரைன் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் வகையில் அங்கு அமைதி திரும்ப வேண்டும்.” இவ்வாறு ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.