உக்ரைனுக்கு எப்-16 விமானங்கள்

கோபன்ஹேகன்:,ஆக 21-
உக்ரைன், ரஷியா போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ரஷிய தயாரிப்பான மிக்-29, சுகோய் ஜெட் போன்ற பழைய விமானங்களையே உக்ரைன் நம்பி உள்ளது. உக்ரைன்-ரஷியா போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டுமென அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தனது போர்த்திறனை அதிகரிப்பதற்காக எப்-16 என்ற அதிநவீன போர் விமானங்களை வாங்க உக்ரைன் முடிவு செய்தது. இதனால் நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகளிடம் உக்ரைன் அதிகாரிகள் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
ஆனால் அதற்கு அமெரிக்காவின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த எப்-16 போர் விமானங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை அதன் அனுமதி அவசியம் ஆகும். இதற்கிடையே, எப்-16 விமானங்களை மற்ற நாடுகளுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு இந்த விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் உக்ரைன் வான்பாதுகாப்பு மேலும் மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், உக்ரைனுக்கு எப்-16 விமானங்கள் வழங்கப்படும் என நெதர்லாந்து மற்றும் டென்மார்க் அரசுகள் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் கூறுகையில், அதிபர் ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்று உக்ரைனுக்கு எப்-16 ரக விமானங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார். முன்னதாக, நெதர்லாந்து அரசும் உக்ரைனுக்கு எப்-16 விமானங்களை அளிக்க உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.