
வாஷிங்டன்: நவம்பர் 3-
உலகெங்கும் இருக்கும் பல்வேறு போர்களை நானே முடிவுக்குக் கொண்டு வந்தேன் என்று டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அவரே ஒரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை எடுக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார். கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவில்லை என்றால் ராணுவ நடவடிக்கை எடுப்பேன் என அவர் சொல்லியிருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். அமெரிக்க அதிபரான டிரம்ப் பொதுவாக எப்போது என்ன சொல்வார் என்றே தெரியாது. திடீர் திடீரென அவர் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளைக் கூறிவிடுவார். அது உலகெங்கும் பரபரப்பைக் கிளப்பும். இதற்கிடையே டிரம்ப் இப்போது நேரடியாகவே ராணுவ மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
கிறிஸ்தவர்கள் படுகொலை மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற அவர், இதைச் செய்யவில்லை என்றால் அமெரிக்கா படைகள் அங்கு அனுப்பப்படும் அல்லது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராணுவ நடவடிக்கைக்கு உடனடியாகத் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளதாக டிரம்ப் கூறினார். அமெரிக்கப் படைகள் நைஜீரியாவில் இறங்கித் தாக்குதல் நடத்துமா அல்லது வான்வழித் தாக்குதல்கள் எதாவது நடத்துமா என கேட்டபோது, “நீங்கள் சொல்வது நடக்கலாம்.. இதுபோல பல விஷயங்கள் நடக்கலாம். நான் பலவற்றை யோசிக்கிறேன்.. நைஜீரியாவில் அவர்கள் கிறிஸ்தவர்களைப் பெருமளவில் கொல்கிறார்கள். டிரம்ப் அச்சுறுத்தல் முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை தான் இதே குற்றச்சாட்டுகளுக்காக நைஜீரியாவுக்குச் செல்லும் அமெரிக்க உதவிகளை நிறுத்தப் போவதாக டிரம்ப் அச்சுறுத்தினார். ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியா தனது நாட்டில் உள்ள கிறிஸ்தவ மக்களைப் பாதுகாக்கத் தவறினால் அமெரிக்கா நேரடியாகத் தலையிடும் என்றும் எச்சரித்தார். அவர் மேலும் கூறுகையில், “நைஜீரியாவில் கிறிஸ்தவ மதம் ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறது.. அங்குள்ள சில தீவிர இஸ்லாமிய அமைப்புகளே இதற்குக் காரணம்” என்றார். பொதுமக்களின் மதச் சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் சமீபத்தில் தான் நைஜீரியாவை அமெரிக்கா சேர்த்திருந்தது. அப்படிச் சேர்த்தவுடனேயே டிரம்ப் இதுபோல எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

















