உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

புதுடெல்லி: டிச. 22- மணல் குவாரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மணல் குவாரிகளிலும் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.இதைத் தொடர்ந்து பத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநில நீர்வளத்துறையின் மூத்த அதிகாரிகள், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் தரப்பிலும், அதேப்போன்று தமிழ்நாடு பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘மணல் குவாரி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டால், எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.