உஜ்ஜயினி கோவிலில் தீ 14 பேர் காயம்

போபால் , மார்ச் 25-ஹோலி பண்டிகையன்று உஜ்ஜயினி மகாகாலேஸ்வர் கோயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பூசாரிகள் காயமடைந்தனர். ஹோலி பண்டிகை இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகையாகும். இந்தியாவில் வாழும் வட இந்திய இந்துக்களால் இந்த ஹோலி பண்டிகை சிறப்பு விழா போல கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஹோலி தினத்தில் கலர் பொடிகளை தூவி விளையாடுவது வழக்கம். வட இந்தியாவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இந்த ஹோலி பண்டிகை சமீப காலங்களில் தமிழகத்திலும் குறிப்பாக சென்னையில் உள்ள சௌகார்பேட்டையில் அதிகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயிலில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 14 பூசாரிகள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோயிலின் கருவறைக்குள் நடந்த ஆரத்தியின் போது தீ விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
“ஆரத்தியின் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று மாவட்ட ஆட்சியர் நீரஜ் சிங் தெரிவித்தார்.இந்த தீவிபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.