உடுக்கை அடிப்பவன் போல் நடித்து தங்க நகைகள் கொள்ளை:ஒருவன் கைது

பெங்களூர் : செப்டம்பர் . 14 – தனியாக இருக்கும் பெண்கள் , முதிய தம்பதியர் , வசித்துவரும் வீடுகளை குறியாய் கொண்டு உடுக்கை அடிப்பவர் வேடத்தில் பூஜை செய்வதாக நம்பவைத்து தங்க நகைகளை அபகரித்து வந்த ஒருவனை ஞான பாரதி போலீசார் கைது செய்துள்ளனர். ஹெக்கனஹள்ளி க்ராஸ் வாசியான ஆனந்தா என்ற உடுக்கை கிருஷ்ணப்பா என்பவன் கைது செய்யப்பட்ட குற்றவாளி என டி சி பி லக்ஷ்மண லிம்பரகி தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஞான பாரதியின் கே பி எஸ் சி லே அவுட்டில் வசித்துவந்த மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஊழியர் வரதராஜு என்பவரின் மனைவியிடம் பூஜை செய்வதாக நம்பவைத்து மோசடி செய்துள்ளான். வரதராஜுவின் தந்தை சமீபத்தில் இறந்துபோனார். ஆகஸ்ட் 13 அன்று அதிகாலை குற்றவாளி அவருடைய வீட்டின் கதவுக்கு அருகில் உடுக்கை அடித்து கொண்டு சென்றுள்ளான். ஏற்கெனவே இந்த வீட்டில் ஒரு சாவு நிகழ்ந்துள்ளது . மேலும் மூன்று மரணங்கள் சம்பவிக்கும். என உடுக்கை அடித்தபடி கூறியுள்ளான். அதே நாள் காலை 10 மணியளவில் மீண்டும் வீட்டின் அருகில் வந்த குற்றவாளி வரதராஜுவின் மனைவியிடம் மீண்டும் இந்த வீட்டில் சாவுகள் நடக்கக்கூடாது என்றால் மயானத்தில் உடல் மீது உள்ள தங்க நகைகளை வைத்து பூஜை செய்யவேண்டும் என கூறியுள்ளான். அதன்படி வரதராஜுவின் மனைவி கையில் கருப்பு மையை பூசி அவன் கூறுவது போல செய்வதாக நம்ப வைத்துள்ளான். பின்னர் பூஜை செய்ய வேண்டும் என்று கூறி அவருடைய உடலில் இருந்த 2 லட்ச ருபாய் மதிப்புள்ள இரண்டு தங்க செயின் , ஒரு மோதிரம் மற்றும் ஐந்தாயிரம் ருபாய் ரொக்கம் ஆகியவற்றை பெற்று கொண்டு பூஜை முடிந்த பின்னர் தங்க நகைகளை திருப்பி கொடுப்பதாக கூறி மொபைல் எண்ணை கொடுத்து சென்றுள்ளான். ஆனால் குற்றவாளி ஒரு மாதமாகியும் போனை எடுக்க வில்லை இதனால் சந்தேகமடைந்த வரதராஜு வீட்டார் போலீசில் புகார் கொடுத்தனர். இப்போது போலீசார் குற்றவாளியை கைது செய்து தங்க நகைகளையும் மீட்டுள்ளனர்.