உணவகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – ஊழியர் கைது

பெங்களூரு, மார்ச் 28:
ஊதியம் தராததால் ஆத்திரம் அடைந்து குடிபோதையில் உள்ள புகழ்பெற்ற உணவகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஊழியரை மகாதேவபுரா போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு மகாதேவபுரா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாஸ்தா தெரு உணவகத்துக்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே உணவகத்தின் ஊழியர் வேலு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் வெடித்துவிடும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் மிரட்டியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த உணவகத்தின் உரிமையாளர் அளித்த தகவலின் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், வெடிகுண்டு செயலிழக்கும் படை அதிகாரிகளை அழைத்து, இரவு முழுவதும் உணவகத்தில் சோதனை நடத்தினர். ஆனால் எங்கும் தேடியும் வெடிகுண்டை கண்டுபிடிக்கவில்லை.
இது போலி வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு என்பதை அறிந்து, விசாரணை செய்து, அதே உணவக ஊழியர் வேலுவை போலீசார் கைது செய்தனர். உணவகத்தின் இந்திராநகர் கிளையில் பணிபுரியும் வேலு, ஊதியம் தராததால் குடிபோதையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக‌ மிரட்டினார். வேலுவை காவலில் எடுத்து விசாரித்ததில், அது போலி வெடிகுண்டு மிரட்டல் என தெரியவந்தது. இது குறித்து மகாதேவபுரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.