உதயநிதிக்கு மேலும் முக்கியத்துவம்

சென்னை: பிப்ரவரி 1. திமுக தேர்தல் பணிக்குழு நடத்தும் மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டமானது, அமைச்சர் உதயநிதியை அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கும் நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வாகவும் மாறி வருகிறது.
வாரிசு அரசியல் கட்சி என்று திமுக மீது விமர்சனங்கள் தொடர்ந்தாலும்,அவற்றை கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த கட்சி நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலினை கட்சியினர் ஏற்றுக்கொண்டதைப்போல், அவரது மகன் உதயநிதிக்கும் கட்சியில் உரிய முக்கியத்துவம் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.
இதில், சீனியர் முதல் ஜூனியர் வரை யாரும் விதிவிலக்கல்ல. உதயநிதியும் கட்சியில் தனக்கான இடத்தை உயர்த்தும் வகையில், கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதுடன், நாட்டு நிகழ்வுகளில் பெரும் பாலானவற்றில் அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.கட்சியினர் மத்தியிலும் இதன் மூலம் பிரபலமடைந்து வருகிறார்.
இதையே சமீபத்தில் ‘திமுகவில் அடுத்தடுத்து தளபதிகள் உருவாகுவதாக’ அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான் சமீபத்தில், கட்சியின் இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை சிறப்பாக நடத்தியதாக உதயநிதியை முதல்வர் பாராட்டினார்.
இதையடுத்து தற்போது நாடாளுமன்ற தேர்தலும் வரவுள்ளதால் திமுக சார்பில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவில் சீனியர் அமைச்சர்களுடன் ஜூனியரான உதயநிதிக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, திமுகவுக்கு சாதகமற்ற கோவை மாவட்டம் அடங்கிய மேற்கு மண்டலம் உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவே, திமுக தலைமை அவருக்கு வைக்கும் தேர்வு என்கின்றனர் நிர்வாகிகள்.
அத்துடன் இந்த தேர்தலில், திமுக வேட்பாளர்கள் தேர்விலும் உதயநிதியின் பங்கு அதிகளவில் இருக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்ப, அவர் தனக்கு நெருக்கமானவர்கள், இளைஞரணியின் முக்கிய பொறுப்பாளர்களிடம் குறிப்பிட்ட சில தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்க அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எங்களிடம் தேவையான தகவல்களையும் கேட்டுப் பெறுகிறார். எங்கள் மண்டலத்துக்கான தேர்தல் பணி பொறுப்பாளருடய கருத்துக்களையும் அவர் கேட்டு செயல்படுகிறார். இந்த தேர்தல் பணிக்குழு கூட்டம் என்பது நேரடி அறிமுககூட்டம் போன்று நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுதவிர, தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணத்தில் உள்ளார். அவர் வரும் பிப்.7ம் தேதி தமிழகம் திரும்புகிறார். அவர் வருவதற்கு முன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை பெரும்பாலும் முடித்துவிட்டு, இறுதியாக பிப்.9-ம் தேதி காங்கிரஸுடன்தொகுதிகளை இறுதி செய்துவிரைவில் அறிவிக்கவும் திமுக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.